Search This Blog

Friday 26 August 2011

நாம் ஏன் பணக்காரராக இருக்க வேண்டும்?


வாழ்வியல் நுட்பங்கள்
நாம் ஏன் பணக்காரராக இருக்க வேண்டும்?
டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

என் இனிய நண்பர்களே! ஒருவர் ஏழையாய் பிறப்பது குற்றமில்லை, ஆனால் ஏழையாய் வாழ நினைப்பதுதான் குற்றம். ஏழையாய் வாழ நினைப்பது அவரின் தனிப்பட்ட முடிவானாலும், அது அவரின் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை முடிவு செய்கிறது, ஆதலால் இது தனிப்பட்டவர் சுதந்திரம் அல்ல. சுதந்திரம் என்பது நினைத்த மாதிரியெல்லாம் வாழ்வதில் இல்லை. எதிலும் சிக்காமல் வாழ்வதுதான் சுதந்திரம். சிக்கியபின் விடுவிக்கப்படுவது விடுதலை ஆகும். சிக்கி இருக்கும் போதுதான் சுதந்திரம் பறிபோனது புரியும். சரி, அன்பர்களே! ஏழ்மை என்ற சிறைக்குள் சிக்கியவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளையும், ஏழ்மையில் சிக்காமல் இருக்கும் பணக்காரர்களுக்கு கிடைக்கும் பரிசுகளையும் கூர்ந்து கவனித்தீர்களேயாயின் ஒரு உண்மை புரிய வரும். அந்த உண்மை என்ன வென்றால் ஏழ்மையில் உழன்று காலம் முழுமைக்கும் படும் பாட்டை விட ஏழ்மையில் இருந்து செல்வச் செழிப்பு நிலைக்கு மாறச் சில காலம் படும் பாடு மிக மிகக் குறைவானதே என்பதுதான். இதை நான் உங்கள் மன ஆறுதலுக்காகச் சொல்லவில்லை, மன மாற்றத்திற்காக சொல்கிறேன். உண்மை புரிந்தால் அந்தப் பக்கம் இருக்க விரும்பமாட்டீர்கள், இந்தப் பக்கம் வர முதல் அடியை எடுத்து வைக்க முனைவீர்கள். அந்த உண்மைகளை இனி பார்ப்போம்.

வறுமைக்குச் சாபம்
செல்வச் செழிப்புக்குப் பரிசு
1. என்பதுக்கு இருபதுதான்: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் 80 விழுக்காடு இருக்கின்றனர். இவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் வெறும் 20 விழுக்காடுதான். ஒரு குடும்பத்திற்கு கிடைப்பது நாலில் ஒரு பங்குதான், ஆகையால் வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்.
1. இருபதுக்கே என்பது: பணக்காரர்கள் 20 விழுக்காடு இருக்கின்றனர். அவர்களுக்கு 80 விழுக்காடு வசதிகள் கிடைக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு நான்கு மடங்கு கிடைக்கிறது. ஆகவே, வாழ்கை எப்போதும் சுபீட்சம்தான்.
2. விபத்து நிகழ்ந்தால் பாதிப்பு அதிகம்: வாழ்க்கைக்கு தேவையானது நான்கில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கும் நிலையில், அந்தக் குடும்பத் தலைவன் தவறினால், குடும்பம் தலை நிமிர இன்னொரு தலைமுறை வேண்டும்.
2. விபத்து நிகழ்ந்தால் பாதிப்பு குறைவு: வாழ்க்கைக்கு தேவையானது நான்கு மடங்கு இருப்பதால், தலைமுறைத் தாண்டி நிலைக்கும் ஆகையால், குடும்பத் தலைவன் தவறினாலும், பாதிப்பு அதிகம் இருக்காது.
3. கடன் வீடு: வீடு கட்ட 10 இலட்சம் வங்கிக் கடன் வாங்கினால், அதை 15 வருடங்களில் திருப்பிக் கட்ட 20 இலட்சம் ஆகிறது. ஆக, வீடு கட்ட நாம் 20 இலட்சம் செலவழிக்கிறோம். அதுவே, அந்த 20 இலட்சம் நம் கையில் இருந்தால், வீடுமேலே மாடி கட்டி வாடகை வருமானம் பார்க்கலாம் அல்லவா? நமக்கு வீடு என்பது சுமையாகும் (Liability)
3. சொந்த வீடு: சொந்தப் பணத்தில் தனது கனவு இல்லத்தை கட்டிய பின் வாடகை வருமானத்திற்கும் வீடுகள் கட்டுகிறார்கள். ஆக, வீட்டையும் முதலீடாகப் பார்க்கிறார்கள். இவகளுக்கு வீடு என்பது ஒரு சொத்து (Asset) ஆகும்.
4. கடன் வாகனம்: கடனில் வாங்கிய இரு சக்கர வாகனம் கடன் அடைக்குமுன் பழசாகிவிடுகிறது. அடுத்த வண்டி வாங்க யோசிக்கிறோம். இதில் வண்டிக்கு விலை அதிகம் உள்ள பெட்ரோல் (ஆதார விலை குறைவு) போட வேண்டியுள்ளது.
4. சொகுசுக் கார்: புதிய புதிய மாடல்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சொகுசுக்காரில் பயணம் பாதுகாப்பானதுகூட. இந்தக்காருக்கு விலை குறைவாக உள்ள டீசல் (ஆதார விலை அதிகம்) போடப்படுகிறது.
5. வருமான வரிச் சலுகை மிகக் குறைவு: வருமான வரி கழித்துக் கொண்டுதான் நமக்குச் சம்பளம். நம் சொற்ப வருமானத்திற்கு வரி மிக மிக அதிகம். வருமான வரி விதிப்புக்கு குறைவாக வருமானம் வாழ்வதற்கே போதாது.
5. வருமான வரிச் சலுகை மிக அதிகம்: இவர்கள் சம்பாதித்த பின் வரி கட்டலாம். இவர்கள் மரம் நட்டால் பசுமை வரிச்சலுகையும், புதிய இடத்தில் தொழில் தொடங்கினால் வரி விடுமுறை (Tax Holiday) உள்ளிட்ட சலுகைகள் பல உண்டு.
6. விற்பனை வரிச்சுமை நம் தலையில்: ஒரு பொருள் வாங்கினால் அதன் விற்பனை வரியை பொருளின் விலையில் சேர்த்து நம்மிடம்தான் வசூலிக்கிறார்கள்.
6. விற்பனை வரியை ஏழைகள் தலையில்: சம்பாதிப்பது இவர்கள், விற்பனை வரி கட்டுவது வாங்குபவர்கள். இதற்குப் பெயர்தான் தலையில் மிளகாய் அரைத்தலோ.
7. படிக்கத் தரம் குறைந்த பள்ளிகள்: படிக்கிற பிள்ளை எங்கு வேண்டுமானாலும் படிக்கும் என்று நம் இயலாமைக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். உண்மையைச் சொல்லுங்கள்! தரமான பள்ளி நம் திறமையான குழந்தைக்கு நல்ல களமாக அமையாதா?
7. படிக்கச் சர்வதேச தரத்தில் பள்ளிகள்: தரம் வாய்ந்த பள்ளி குழந்தையின் ஆளுமைத்திறனை உயர்த்தி, புத்தி கொண்டு மென்மையாக உழைக்க பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் அடுத்த தலைமுறையை ஆள்வார்கள்.
8. நகைகள் நகைக் கடனுக்காக: இருக்கும் கொஞ்ச நகையும் அவசரத் தேவைக்கு அடமானம் வைக்க உதவும்.
8. நகைகள் முதலீட்டுக்காக: புதிது புதிதாக நகைகள் வாங்குவது அழகுக்காக மட்டும் அல்லாமல் தங்க முதலீடாகவும்தான்.
9. விடுமுறை பாட்டி வீட்டில்: இலவசமாக தங்க இடமும், உண்ண உணவும் கிடைப்பதால்தான் குழந்தைகளை பாட்டி வீட்டிற்கு அனுப்புகிறோம். அன்பர்களே! பாசத்திற்காக என்று நீங்கள் சொல்வீர்களேயாயின், பாட்டியையும் சேர்த்துக் கொண்டுச் சுற்றுலா செல்ல வேண்டியதுதானே?.
9. விடுமுறையில் வெளி நாட்டில்: பரந்த உலகில் விசால அறிவைப் பெற இவர்களின் குழந்தைகளை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள்.
10. கொடுத்த கை ஏந்தும் நிலையில்: முப்பது வருடங்கள் உழைத்து நம் செல்வங்களை வளர்த்து ஆளாக்கிவிட்டு, அசந்து உட்கார்ந்து, நம் பிள்ளைகள் நமக்கு சோறு போடுவார்களா?, வைத்தியத்திற்கு செலவு செய்வார்களா? என்று எதிர் பார்த்து கை ஏந்தும் நிலைதான் நமக்கு.
10. கொடுத்த கைத் தாழாத நிலையில்: "மகனே! என் பேச்சை கேட்டால் சொத்து உனக்கு, இல்லையேல் கோவிலுக்கு" என்று கம்பீரமாக சொல்க்கூடிய கொடுத்த கை தாழாத நிலை இவர்களுக்கு உண்டு.
வறுமையில் வாழ நினைப்பதை விடுவோம்!
வறுமையை ஜெயிக்க வழி காண்போம்!

No comments:

Post a Comment